மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, ஹிந்தியை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம், எல்லா இடங்களிலும் நடைபெற்றது. அந்தப் போராட்டம் நடைபெற்ற அந்தக் காலத்தில் தான் டாக்டர் கலைஞர் அவர்கள் 14 வயது மாணவனாக கையில் கொடி ஏந்தியவராக, இந்தி எதிர்ப்பை காட்டுகின்ற ஒரு போர் வீரனாக, திருவாரூர் வீதியிலே நடந்தார். 1938இல் ஹிந்தி பின்வாங்கி ஓடியது, 1948லே அவிநாசிலிங்கம் மீண்டும் இந்தியை கொண்டு வந்த போது, அப்போதும் எதிர்ப்பு கிளம்பியது.
அவர் இந்தியை அறிவித்த 48 மணி நேரத்தில் உள்ளாக மாமன்னன் உலவிய காஞ்சி மாநகரில், அறிஞசர் அண்ணா அவர்கள் ஒரு மாநாட்டை கூட்டினார்கள். அந்த மாநாட்டிலே சொன்னார்கள். நாம் ஒரு போராட்டத்திற்கு தயாராகி விட்டோம். நமது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கின்ற போராட்டம். இது சாதாரண போராட்டம் அல்ல. நம்முடைய உயிர்களை பழி வாங்குகின்ற போராட்டம். ஆனால் உயிர் நமக்கு வெள்ளம் அல்ல, நான் வீரர்களை அழைக்கிறேன், வீணர்களை அல்ல.
வீட்டிற்கும், சிறைச்சாலைக்கும் வித்தியாசம் தெரியாத தியாக சிலர்களை அழைக்கிறேன், சட்டசபை பொம்மைகளை அல்ல என்று கூறிவிட்டு, 1938இல் ஏற்பட்ட அதே உணர்வு, 1948லும் ஏற்பட்டது. அதன் பிறகு 1965லே போராட்டம் இந்த போராட்டம் வருவதற்கு என்ன காரணம் என்றால் ? 1963 அக்டோபர் 13 ஆம் நாள், லால்பகதூர் சாஸ்திரி உள்துறை அமைச்சர் சட்ட மசோதா கொண்டு வந்தார். ஆட்சிமொழி சட்ட மசோதா. அதன்படி 1965இல் ஜனவரி 26இல் இந்த நாட்டின் ஆட்சி மொழியாக ஹிந்தி மகுடம் சூட்டிக் கொள்ளும். ஏப்ரல் 13-ஆம் தேதி நாள் லால்பகதூர் சாஸ்திரி கொண்டு வந்தார்.
அக்டோபர் 13ஆம் தேதி இங்கே ஹிந்தி எதிர்ப்பு மாநாடு கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டை அறிஞர் அண்ணா அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். அந்த மாநாட்டில் தான் டாக்டர் கலைஞர் அவர்கள், இந்தி எதிர்ப்பு போராட்டத்தினுடைய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு தான் முடிவு செய்யப்பட்டது… இந்தியாவின் அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்துவோம். 17 வது பிரிவை தீயிட்டு கொளுத்துவோம் என்று அந்த மாநாட்டில் தான் முடிவெடுக்கப்பட்டது என ஹிந்தி எதிர்ப்பு போராட்ட நினைவுகளை பகிர்ந்தார்.