உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும், தன்னலமற்ற மனதுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பயங்கரமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் தயாராக இருப்பதை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. நம்முடைய உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.
உலகத்தை தலைகீழாக மாற்றிய, இந்த கண்ணுக்கு தெரியாத வைரஸிற்கு எதிராக நமது வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபடுவதற்கான நேரம் இது. கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் மிக பரிசுத்தமான கோயில். மத வழிபாட்டு இடங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல. அரசாங்கத்தின் ஆலோசனையைக் கேளுங்கள். சில வாரங்களுக்கான சுய தனிமை உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கான வாழ்க்கையை கொடுக்கலாம்.
நீங்கள் கொரோனாவை பரப்பும் கருவியாக இருக்காதீர்கள். சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். இந்த கிருமி உங்களிடம் இருக்கிறது என்பதை கூட உங்களுக்கு எச்சரிக்காது. எனவே உங்களுக்கு தொற்று இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது வதந்திகளை பரப்பி இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும் நேரமல்ல. சிந்தனையுடன் இருப்போம். பல லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை நம் கையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.