சாத்தான்குளம் கைதுகள், கடமை இப்போது தான் தொடங்குகின்றது என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிக்கிக்கொண்ட தமிழக அரசு:
சாத்தான்குளம் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் காப்பாற்ற தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தவிடு பொடியாக்கபட்டு படுகொலை செய்தவர்கள் நீதிமன்றத்தின் தலையிட்டால் சட்டத்தின் முன்பு வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். குடும்பத்தின் கண்ணீர், மக்கள் போராட்டம், கடையடைப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கை, நீதிமன்றம், ஊடகம் என அனைத்து தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு அதிமுக அரசு சிக்கிக்கொண்டது.
கொலையை மறைக்க முயற்சித்து அரசு தமிழக அரசு…
தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே கொலையை மறைக்க முயற்சித்தது. மூச்சுத்திணறி உடல் நலம் இல்லாமல் இருந்தார்கள் என்று முதலமைச்சர் தீர்ப்பு எழுதினார். அரசு வழக்கறிஞர் பூசிமொழுகினார். இது லாக்கப் மரணமே இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சொன்னார்.
மேலிடத்தில் உதவி இல்லாமலா?
போலீசார் நீதிபதியை மிரட்டினார்கள். தலைமை காவலர் ஜோதி மிரட்டப்பட்டு உள்ளார். சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. மேலிடத்தின் உதவி இல்லாமல் சாதாரண போலீஸ்காரர்களால் இவ்வளவு செய்திருக்க முடியுமா ?
சில கைதுக்களை செய்துவிட்டு அனைவரது வாயையும் மூடி விட்டோம் என்று தமிழக அரசு தப்புக் கணக்கு போடக் கூடாது. அனைத்து தரப்பினரும் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார்கள். கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்தவர்களையும் விசாரிக்க வேண்டும். முதலமைச்சரின் கடமை முடிந்துவிடவில்லை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.