ஆடவர், மகளிர் கிரிக்கெட்டர்களுக்கான பிசிசிஐ ஒப்பந்த விவரங்கள் சில நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் ஆடவர் கிரிக்கெட்டர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ. 7 கோடியாகவும், மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ. 50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு குறித்து ஸ்மிருதி மந்தனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுபற்றி அவர் பேசுகையில், ”நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பிசிசிஐக்கு வருவாய் வருவது ஆடவர் கிரிக்கெட் மூலம்தான். மகளிர் கிரிக்கெட் எப்போது வருவாய் ஈட்டப்படுகிறதோ, அப்போது சம ஊதியம் கேட்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். ஆனால் தற்போது, அதுபற்றி பேசுவது சரியானது அல்ல.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் யாருக்கும் இந்த எண்ணம் இல்லை. ஏனென்றால், அனைவரின் எண்ணமும் கிரிக்கெட் மீது மட்டுமே உள்ளது. எங்களின் கிரிக்கெட் மூலம் ரசிகர்களை மைதானத்திற்கு அழைத்துவர வேண்டும். அதற்கு தான் உழைக்கிறோம். அது நடந்தால், மற்றவையெல்லாம் தானாகவே நடக்கும்.
மகளிர் கிரிக்கெட்டால் வருவாய் ஈட்டப்படாமல், எங்களுக்கு சம ஊதியம் வேண்டும் என்பது சரியானது அல்ல. எனவே அதுபற்றி கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை டி20 தொடருக்காக அனைவரும் தயாராகிவருகிறோம். அணியில் இடம்பெற்றுள்ள அனைவருமே ஆஸ்திரேலிய மைதானங்களில் ஆடியுள்ளோம் என்பதால், சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக முத்தரப்பு தொடரில் பங்கேற்கிறோம். அது மிகவும் முக்கியமான தொடர். அணியில் அனுபவ வீராங்கனைகளும் இளம் வீராங்கனைகளும் உள்ளதால், இந்தத் தொடர் அனைவருக்கும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.