செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கலைஞர் கருணாநிதி போற்றப்பட வேண்டிய ஒரு தலைவர். தமிழகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு தலைவர். அவருக்கு ஒரு வரலாற்று சின்னம் இங்கே நிறுவப்படுவது தேவையான ஒன்று. எப்படி நிறுவுவது ? எந்த இடத்தில் ? எந்த அளவில் ? எந்த செலவில் நிறுவுவது ? என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும்.
மக்களுடைய பிரச்சினைகளுக்காக பணியாற்றக் கூடிய அதே வேலையில், வரலாற்றில் தடம் பதித்தவர்களுக்காகவும் நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்து தான் ஆக வேண்டும். அந்த வரிசையிலே கலைஞருக்கு இங்கே நினைவிடம் அவசியமானது. தென்காசி அருகே பாஞ்சாங்குளம் எனும் கிராமத்தில் பள்ளி சிறுவர்களின் உள்ளத்தை காயப்படுத்தும் வகையில் சாதி வெறியர்கள் பெட்டிக்கடையில் மிட்டாய், தின்பண்டங்கள் வழங்க முடியாது, விலைக்கு தரமாட்டோம் என மிக மோசமான சாதி வன்கொடுமையை நிலைத்திருக்கிறார்கள்.
ஊர் கட்டுப்பாடு என்று அவர்கள் அறிவித்ததன் மூலம் அந்த ஒரு நபர் மட்டும் இன்றி, ஊரில் உள்ள பலரும் அதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. எனவே ஊர் கட்டுப்பாட்டிற்கு காரணமாக இருந்த அனைவரையும் வழக்கில் இணைக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசியலில் முதல் முறையாக அந்த கிராமத்தில் வன்கொடுமை இழைத்தவர்கள் 6 மாத காலத்திற்கு சொந்த ஊருக்கு போக முடியாது என்று தடை விதித்திருப்பது வரவேற்பு உரியது. தீண்டாமை கொடிகளை இப்படித்தான் சட்டபூர்வமாக கட்டுப்படுத்த முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் இதை வரவேற்கிறது என தெரிவித்தார்.