இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5 ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவையானது அமலில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், கூறிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் விவரத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் நிலையில் அதில் 33 நகரங்கள் குஜராத்தில் மட்டுமே இருக்கிறது. அதன் பிறகு மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் தலா 2 நகரங்களும், மகாராஷ்டிராவில் 3 நகரங்களிலும் 5ஜி சேவை இருக்கிறது. இதனையடுத்து டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் மட்டுமே 5ஜி சேவை இருக்கிறது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் மட்டுமே 5ஜி சேவை இருக்கிறது.