Categories
மாநில செய்திகள்

“இது காலத்தின் கட்டாயம்”…. பரந்தூர் விமான நிலையம் நிச்சயம் அமையும்….. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்….!!!!!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை தொழில், வர்த்தக சபை இணைந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பசுமை விமான நிலையம் மற்றும் விரைவாக தமிழகம் முன்னேறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை அடையவதற்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு விதமான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 2-வது பெரிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் கட்டாயமான ஒன்று. கடந்த 24 வருடங்களாக இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பேசப்பட்ட போரிலும் தற்போது தான் மத்திய அரசு விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை உறுதி செய்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால் தான் சரியானதாக இருக்கும். இங்கு சுமார் 20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையத்தை கட்டி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் விமான நிலையத்தால் ஏறக்குறைய 30 முதல் 35 ஆண்டுகள் வரை தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் போன்றவற்றை சமாளிப்பதற்கு எதுவாக இருக்கும்.

சென்னையில் உள்ள மிகப்பெரிய மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஒரு பக்கம் அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றொரு பக்கம் ராணுவ பயிற்சி அமைப்பு, அடுத்த பக்கமாக அடையாறு ஆறு இருப்பதால் விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து  400 விமானங்கள் இயக்கப்படும் நிலையில் வருடத்திற்கு 2.2 கோடி பயணிகளை மட்டும் தான் கையாள முடிகிறது. சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் முடிவதற்கு 7 வருடங்களாகும் நிலையில், விரிவாக்க பணிகள் முடிவடைந்தாலும் 3.5 கோடி பயணிகளை தான் கையாள முடியும்.

ஆனால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் சுமார் 600 பயணிகள் செல்லும் வகையில் பெரிய ஜெட்‌ ரக விமானங்களை இயக்க முடியும். அதன் பிறகு பெங்களூர் மற்றும் டெல்லியில் இருந்து சென்னைக்கு மற்ற விமானத்திற்கு மாற வேண்டிய சூழல் ஏற்படாது. சர்வதேச பயணிகள் நேரடியாக சென்னைக்கு வந்து தரையிறங்கி கொள்ளலாம். இதனால் சர்வதேச அளவிலான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

அதோடு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் திட்டமும் விரிவாக்கம் செய்யப்படும். இங்கிருந்து சரக்குகள் கையாள்வது அதிகரிக்கும் போது வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கும். மேலும் பரந்தூரில் விமான நிலையம் அமைவது என்பது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார் ‌

Categories

Tech |