இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதாலேயே ரிஷப் பண்டை தேர்வு செய்தோம் என்று இந்திய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இடம்பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டால் ஆத்திரமடைந்த ராயுடு டுவிட்டரில் கிண்டலாக பதில் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். பின்னர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் ராயுடு .
போட்டியின்போது ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து ராயுடு மாற்று வீரராக இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அனுப்பப்பட்டனர். இதனால் கடுப்பான ராயுடு அனைத்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த பின் இந்திய தேர்வு குழு தலைவர் எம்.எஸ். கே பிரசாத் செய்தியாளர் சந்தித்தார் அப்போது ராயுடு நீக்கப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
அவர் பேசியதாவது, ” நாயுடுவின் ட்விட்டை நான் அப்போது ரசித்தேன். அது ஒரு அருமையான ட்விட். ஆனால் பேட்டிங் வரிசை மற்றும் அணியின் கலவையின் அடிப்படையிலேயே ராயுடுவை தேர்வு செய்ய முடியாமல் போனது. அவருக்கு எதிராக நாங்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டோம் என்று கூறுவது சரியானதல்ல. இடம் கிடைக்காததால் அவர் எந்தளவுக்கு வருத்தம் அடைந்திருப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் நானும் வருந்துகிறேன். தவான் காயத்தால் வெளியேறியதும் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதாலேயே ரிஷப் பண்டை தேர்வு செய்தோம்” என்று தெரிவித்தார்.