Categories
தேசிய செய்திகள்

யாருமே இல்லை… சுதந்திரமாக சாலையில் சுற்றிய அரியவகை விலங்கு… வைரலாகும் வீடியோ!

ஊரடங்கையொட்டி வெறிச்சோடி காணப்படும் கேரளா சாலையில் மலபார் புனுகுப் பூனை ஒன்று சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 27 மாநிலங்கள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருக்கும் மேப்பையூர் பகுதியில் வெறிச்சோடி கிடக்கும் சாலையில் அரியவகை மலபார் புனுகுப் பூனை ஒன்று ஜாலியாக சுதந்திரமாக வலம் வந்தது. அப்போது எடுக்கப்பட்ட  வீடியோவை சமூக வலைதலத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதில், “மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால், கேரளாவில் இருக்கும் கொச்சி சாலையில் இந்த புனுகுப் பூனை சுதந்திரமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. அதுமட்டுமில்லாமல், சாலை விதிகளையும் இந்த பூனை முறையாகப் பின்பற்றுகிறது” என்று  பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |