தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்து வருகிறார். இவருக்கு யாசகம் எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி மற்றும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி போன்றவைகளுக்கு அனுப்பி வருகிறார். இந்த சேவையை பூல் பாண்டியன் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக யாசகம் எடுத்ததன் மூலம் கிடைத்த 10,000 ரூபாயை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிவாரண நிதிக்காக திண்டுக்கல் ஆட்சியரிடம் வழங்கினார்.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்த பூல் பாண்டி தனக்கு யாசகம் மூலம் கிடைத்த 10,000 ரூபாயை கலெக்டரிடம் வழங்கினார். அதன்பிறகு பூல் பாண்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் 30 வருடங்களாக மும்பையில் தங்கி பொது சேவைகள் செய்துள்ளேன். கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்த நான் பல இடங்களில் யாசகம் செய்து 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு உதவி செய்துள்ளேன். அதன் பிறகு கொரோனா நிவாரண நிதி, இலங்கை மக்களுக்கு நிவாரண நிதி போன்றவற்றையும் வழங்கியுள்ளேன்.
உங்கள் பெயரை சொல்லி யாராவது பணம் திரட்டுகிறார்களா வெளிநாடுகளில் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எனவும், நான் தனியாகத்தான் இந்த சேவையை செய்து வருகிறேன் எனவும் பூல் பாண்டியன் கூறினார். மேலும் கடந்து 2018-ம் ஆண்டில் இருந்து 50லட்சத்து 60 ஆயிரத்தை தமிழக அரசு நிவாரண நிதிக்காக நான் கொடுத்துள்ளேன் என்றார். இன்றைய காலத்தில் வசதி படைத்த ஒரு சிலர் கூட உதவுவதற்கு முன்வராத நிலையில் யாசகம் எடுத்து ஒருவர் உதவுவது பொதுமக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.