இம்முறை சென்னையில் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்கவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருந்தவரை கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தது. பின் 5வது கட்ட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பலமாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. எனவே தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல் படுத்தபடவிட்டாலும், சென்னை உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, தமிழக அரசு ஜூன் 19 முதல் 30 வரை கடுமையான ஊரடங்கை சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் இரண்டு கிலோமீட்டர் நடந்தே சென்று வரலாம். பைக்கில் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மீறி சென்றால் பைக் பறிமுதல் செய்யப்படும். மேலும் 21, 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது. இந்த இரு நாட்களில் அவசர தேவைகளை தவிர வேறு எவ்வித வாகன போக்குவரத்திற்கும் அனுமதி முற்றிலும் மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.