Categories
தேசிய செய்திகள்

எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் – சஸ்பென்ஸை கலைத்தார் மோடி!

மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட் செய்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார்.

இதனால் பிரதமர் நரேந்திர மோடியை பலர் ஃபாலோ செய்து வந்தனர். ட்விட்டரில் சுமார் 53 மில்லியன், பேஸ்புக்கில் 40 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிலேயே அதிக ஃபாலோவர்கள் கொண்ட பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் ட்விட்டர் உட்பட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் வெளியேற யோசிப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள்  கோரிக்கை விடுத்து, இந்திய அளவில் #Nosir என்ற ஹாஷ்டேக்கை  ட்ரெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று ட்விட் செய்துள்ளார். அதில், “இந்த மகளிர் தினத்தில் , எனது சமூக ஊடக கணக்குகளை மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் பெண்களுக்கு வழங்குவேன்.  மில்லியன் கணக்கான மக்களுக்கு  இது பெரும் உந்துதலாக இருக்கும். நீங்கள் அத்தகைய பெண்ணா அல்லது இதுபோன்ற எழுச்சியூட்டும் பெண்களை உங்களுக்குத் தெரியுமா? இது தொடர்பான தகவல்களை எங்களுடன் பகிருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான தகவல்களை #SheInspiresUs என்ற ஹேஸ்டேக் மூலம் பதிவிடுமாறும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை சமூகவலைத்தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறிய சஸ்பென்ஸை கலைத்துள்ளார் மோடி.

Categories

Tech |