திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் புதிதாக தேர்வான நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். அதன்படி திமுக பொதுச்செயலாளர் துறை முருகன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.
அதன் பிறகு ஒரு பெட்டியை திறந்த துறைமுருகன் விலை உயர்ந்த பேனாவை கையில் எடுத்துக்கொண்டு திமுக தலைவர் ஸ்டாலினிடம் சென்று முதல்வர் ஸ்டாலின் சட்டை பையில் இருந்த பேனாவை எடுத்து கீழே வைத்துவிட்டு தன்னுடைய பரிசாக பேனாவை பொருத்தினார். மேலும் “இனிமேல் கையெழுத்து போடணும் என்றால் இந்த பேனாவை கொண்டுதான் போடணும்” என்ற அன்பு கட்டளை போட்டது பொதுக்குழுவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. திமுக தலைவரான பிறகு கிடைத்த முதல் பரிசு அதுவும் திமுகவின் மூத்த தலைவர் கையில் இருந்து பெற்ற அன்பு பரிசு என்பதால் முதலில் மனம் நெகிழ்ந்து பெற்றுக் கொண்டார்.