புதிதாக ஈன்ற குட்டிகள் அனைத்தும் வனவிலங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா அரசின் உத்தரவின்படி அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நீலா, பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்களும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இந்நிலையில் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் சதுப்பு நிலமான் என்று அழைக்கப்படும் பாராசிங்கா என்ற மான் 2 குட்டிகளை கடந்த 11 மற்றும் 14- ஆம் தேதிகளில் ஈன்றது. மேலும் இந்த பூங்காவில் சருகுமானும் கடந்த 9-ஆம் தேதியன்று குட்டியை ஈன்றது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 11- ஆம் தேதி சிங்கவால் குரங்கு ஒரு குட்டியை ஈன்றுள்ளது. எனவே புதியதாய் பிறந்த அனைத்து குட்டிகளும் தொடர்ச்சியாக காப்பாளர் மற்றும் வனவிலங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறது என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.