தீயணைப்பு நிலைய பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலையம் கடந்த 1946-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இது பழமை வாய்ந்த ரயில்வே ஓட்டினால் வேயப்பட்ட கட்டிடம் என்பதனால் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து மழைக்காலங்களில் ஒழுகுகின்ற நிலை ஏற்பட்டது. இதனால் மேற்கூரையில் தார்ப்பாய் கொண்டு மூடியும் பயன் இல்லாததால் இந்த அலுவலகம் அருகில் எதிரில் சிமெண்ட் கூரை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த தீயணைப்பு நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படாததால் பல்வேறு காரணங்களால் மாவட்ட தலைநகரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்படாமல் கிடப்பில் கிடக்கின்றது. மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீயணைப்பு நிலைய கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது எந்தவித அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அலுவலக பயன்பாட்டிற்கு தகுதிவாய்ந்த கட்டிடமாக இல்லை என்றும் அறிக்கையை அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில் மீண்டும் திருவாரூர் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றது.
இதன் காரணமாக 1 கோடியே 74 லட்சத்து 91 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தாலுகா போலீஸ் நிலையம் அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கட்டிடம் 2 தளங்களுடன், 3 வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி என்று அமைத்து கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. அதன்பின் புதிய தீயணைப்பு நிலைய கட்டடத்தில் இருந்து திருவாரூர்-தஞ்சை பிரதான சாலை வருவதற்கான சாலை மிக குருகலாகவே காணப்படுகின்றது. இந்தச் சாலையை அகலப்படுத்தினால்தான் அவசர காலங்களில் தீயணைப்பு வாகனமும் விரைவாக செல்வதற்கு வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக திருவாரூர்-தஞ்சை சாலையில் எந்த நேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருவதனால் தீயணைப்பு நிலையம் செல்லும் இடம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைதொடர்ந்து திருவாரூர் மாவட்ட தலைமை இடமாக இருப்பதனால் குறைந்தபட்சம் 3 தீயணைப்பு வாகனம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தீயணைப்பு நிலையத்தில் 30 வீரர்கள் வேலை பார்க்க வேண்டிய நிலையில் 10 பேர் கூட இல்லாத நிலையில் இருந்து வருகின்றது. இதனால் பணிச்சுமையில் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே வாகன வசதி, தீயணைப்பு வீரர்கள் காலி பணியிடங்களை நிரப்புதல், மழைக் காலத்திற்கு முன்பு புதிய தீயணைப்பு நிலைய கட்டிட கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.