வாயில் கவ்வியிருந்த மீன் தொண்டையில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் ஒன்றாக இணைந்து சின்னக்குன்றங்குடி கண்மாயில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் மான்கொம்பு பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவரும் அவர்களுடன் சேர்ந்து மீன்பிடிக்க கண்மாயில் இறங்கியுள்ளார். இதனையடுத்து இளையராஜா ஒரு மீனை பிடித்து தனது வாயில் கவ்விக்கொண்டு மற்ற மீன்களை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது வாயில் கவ்வியிருந்த மீனானது இளையராஜாவின் தொண்டைக்குள் எதிர்பாராதவிதமாக சிக்கியதால் மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனைப்பார்த்ததும் அருகிலுள்ளவர்கள் இளையராஜாவை உடனடியாக மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் இளையராஜா மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.