தொடர்ந்து பெய்த மழையினால் நான்கு வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிலியம்யபாளையத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மண்சுவர் வீடு தொடர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதேபோன்று அதே பகுதியை சேர்ந்த ரங்கம்மாள் என்பவரின் வீட்டு மண் சுவரும் இடிந்து விழுந்தது. மேலும் உடையக்கவுண்டம்பாளையம் காலனியை சேர்ந்த அற்புதமேரி, மயிலாத்தாள் ஆகிய இருவரது வீடுகளும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின்போது 4 வீடுகளிலும் யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இவற்றின் சேத மதிப்பானது லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கிடையில் பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்ததால் தொட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரகவுண்டன்பாளையம் பழைய காலனி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இது தொடர்பாக தகவலறிந்த தொட்டிபாளையம் ஊராட்சி நிர்வாகம் பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று மழைநீரை வெளியேற்றினர்.