சட்டவிரோதமாக காரில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி தோப்பூர் பகுதியில் கலெக்டர் உத்தரவின்படி மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி கண்ணன், தலையாரி முனியசாமி ஆகியோர் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை அவர்கள் நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரியும், தலையாரியும் காரில் சோதனை மேற்கொண்டபோது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் டிரைவர் காரியாபட்டியை சேர்ந்த ராஜாமுகமது என்பதும் தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் காரை பறிமுதல் செய்ததோடு கிராம நிர்வாக அதிகாரி கண்ணன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் ராஜா முகமது மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.