தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறவும், சொந்தமாக தொழில் தொடங்கவும் திறன் மிகுந்த மனிதவள மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
அண்மையில் வண்டலூர் கிரசென்ட் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கிரசென்ட் புதுமை தொழில் ஊக்குவிப்பு மையம் இணைந்து நடத்திய 120 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்குபெற்ற கண்காட்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார். அங்கு அவர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இன்டெல் தொழில்நுட்ப முன்னேற்ற பரிசோதனை கூடத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசுகையில். “இன்டெல் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை இன்றைய வேகத்திற்கு மேம்படுத்தும் வாய்ப்புகளை வழங்குவதற்கு முன் வருவது பாராட்டுக்குரியது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சர்வதேச அளவு சந்தையில் இன்றைய தேவை என்ன என்பதை விளக்கி அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் கற்றுத் தருவதுடன் சில நிறுவனங்கள் மாதந் தோறும் ஊக்க தொகையும் வழங்கி வருகிறது. திறமையான மனித வள உலகமெங்கும் தேவை என்ற நிலையில் இன்டெல் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவாற்றலை பிறந்து உறுதுணையாக செயல்பட வேண்டும். மேலும் மத்திய உயர் கல்வித்துறை சார்பில் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறும் ஹேக்கத்தான் போட்டிகளை போன்ற தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொழில் நுட்பம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொழில் நுட்ப உதவியுடன் தீர்வு காணும் போட்டிகள் நடத்தலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளர்.
இந்த நிகழ்ச்சியில் இன்டெல் டெக்னாலஜி இந்தியா நிறுவனர் ஸ்மித்வருமா, இணைவேந்தர் அப்துல் குவாதீர் ரகுமான் புகாரி, பதிவாளர் ஏ ஆசாத், கூடுதல் பதிவாளர் என் ராஜா ஹைசன், துணைவேந்தர் ஏ. பீர்முகமது, கிரசென்ட் புதுமை தொழில் ஊக்குவிப்பு மையம் தலைமை செயல் அதிகாரி பார்வேஸ் ஆலம் போன்றவர்கள் பங்கேற்றனர்.