கடன் பிரச்சினையில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கத்தாங்கண்ணி பகுதியில் விவசாயியான சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி பகுதியில் வசிக்கும் செல்லாண்டி, அருண்பாண்டியன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்கள் சுப்பிரமணி தோட்டத்திலேயே தங்கியிருந்து வெங்காய அறுவடைப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் செல்லாண்டி அருண்பாண்டியனுக்கு ரூ.200 கடன் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அருண்பாண்டியனிடம் செல்லாண்டி தான் வாங்கிய கடனை திரும்ப கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து தகராறு முற்றியதில் அருண்பாண்டியன் வெங்காயம் அறுவடை செய்ய பயன்படுத்தும் கத்தியால் செல்லாண்டியை சரமாரி குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்லாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் அருண்பாண்டியன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த குண்டடம் காவல்துறையினர் தப்பி ஓடிய அருண்பாண்டியனை வலைவீசி தேடி வருகின்றனர்.