நெசவு தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டரை கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். இவர் ஆரணியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு பாலாஜி சம்பளத்துடன் வீட்டிற்கு செல்வதற்கு ஆரணி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது ஆரணி பேருந்து நிலையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டம் அதிகமாக இருந்ததால் பாலாஜியின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து பாலாஜி ஆரணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பணம் திருடிய மர்மநபரை வலைவீசித் தேடி வருகின்றனர்.