100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது என வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு தற்போது ஊதியத்தை சமூக வாரியாக பிரித்து வழங்குவதாக மத்திய அரசு கூறப்படுகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி மணி மாலாவிடம் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சங்க சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுடர் நடராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.கே. முருகன் மற்றும் ஏராளமான பெண் தொழிலாளர்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்தை சமூக வாரியாக வழங்குவது சட்ட விரோதமான செயலாகும். இது தொழிலாளர்களின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை குலைக்கின்றது. இந்நிலையில் சத்தியமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மாத காலமாக ஊதியம் வராமல் இருக்கிறது. ஆனால் மற்ற சமூக தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வந்து கொண்டிருக்கிறது. எனவே ஊதியங்களை இதுபோல பிரித்துக் கொடுப்பதை நிறுத்திவிட்டு சமூக பாகுபாடு காட்டாமல் ஊதியம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.