சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
ஜோலார்பேட்டை அடுத்ததாக இருக்கும் கேத்தாண்டபட்டி பகுதியில் திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அமைந்திருகிறது. இதில் இந்த வருடத்திற்கான கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி சர்க்கரை ஆலை அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அன்பழகன் தலைமையில், பொறுப்பாளர்கள் சீனிவாசன், யுவராஜ் மற்றும் செயலாளர் கோபி ஆகியோரின் முன்னிலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அனுமதி வழங்கும் வரை அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சர்க்கரை ஆலை தனி அலுவலரான மணிமேகலையிடம் கூடிய விரைவில் ஆலை அரவையை தொடங்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் நிலுவையில் இருக்கின்ற ஆறு மாதத்திற்கான சம்பள பாக்கிய வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.