ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சிபுரம் பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளைச்சாமி தனது நண்பர்களான பேச்சிராஜா, தேவேந்திரன் ஆகியோருடன் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற வெள்ளைச்சாமி திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளைச்சாமியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன்பின் காவல்துறையினர் வெள்ளைச்சாமியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.