வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் வன விலங்குகளை வேட்டையாடுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் நீலகிரி மாவட்டம் முழுவதும் கள்ளத் துப்பாக்கிகள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிடைத்த தகவலின்படி தேவாலா தனிப்படையினர் பால்மேடு பகுதியில் துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதே போன்று கூடலூர் எல்லமலை பகுதியில் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் இப்பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு வீட்டில் திடீரென சோதனை நடத்தியபோது அங்கு நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது அதே பகுதியில் வசிக்கும் தொழிலாளியான அப்துல் சாகர் என்பவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்துல் சாகரை கைது செய்ததோடு நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் இரும்பு கம்பியையும் பறிமுதல் செய்தனர்.