மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிலுவைபுரம் பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அனில்குமார் கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கவிதாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த 4-வது நாளே கவிதா திடீரென இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த அனில்குமாரால் இதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இதனையடுத்து அனில்குமார் மஞ்சதோப்பில் உள்ள தனது அக்காள் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 17-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அனில்குமார் நீண்ட நேரமாகியும் வெட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் அயித்திகுளம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அனில்குமார் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனில்குமாரின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தனது மனைவி இறந்த வேதனையில் அனில்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.