திருமணம் செய்ய காதலி மறுத்ததால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரட்டகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் அதே ஊரில் வசிக்கும் 22 வயது பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அப்போது கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் கரும்பு வெட்டும் பணிக்காக மைசூருக்கு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் தனது காதலிக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்த முடிவு செய்திருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்து காதலி வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். அதில் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டனின் காதலி அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக மணிகண்டனின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.