மின்வாரிய தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின் நிலைய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் பணியில் இருக்கும் போது சேடப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஊழியர்களுடன் சேர்ந்து சரி செய்வதற்காக சென்றுள்ளார். அதன்பின் பணியை முடித்து விட்டு சக ஊழியர்கள் வீட்டிற்கு சென்ற போது சின்னசாமி மட்டும் அலுவலகத்தில் தங்கி உள்ளார்.
பின்னர் காலை சக ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு வந்த போது அலுவலகத்தின் அறையில் சின்னசாமி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் சின்னசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்னசாமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.