தொழிலாளி வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.2000 மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் லாரிகளில் பொருட்களை ஏற்றி இறக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தொழிலாளி கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் குடும்பத்தினருடன் சென்று கிறிஸ்துமஸ் புத்தாண்டு துணிகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து தொழிலாளியின் செல்போனில் பெண் குரலில் பேசிய ஒருவர் நீங்கள் புதியதாக ஜவுளி வாங்கியதால் உங்களுக்கு ரூ.10,000 புத்தாண்டு பரிசாக கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் அதனை உங்கள் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு உங்கள் வங்கி கணக்கு விவரத்தை சொல்லுங்கள் என கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த தொழிலாளி வங்கி கணக்கு விபரத்தை முழுவதுமாக சொல்லியுள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் அவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.2000 எடுத்ததாக செல்போனுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளி உடன்குடியில் உள்ள வங்கிக்கு சென்று இதுகுறித்து விபரம் கேட்டுள்ளார். அப்போது வங்கியில் உள்ளவர்கள் நாங்கள் எந்த விபரமும் கேட்பதில்லை, கேட்டாலும் சொல்ல கூடாது, நேரில் தான் வர சொல்வோம் என கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மர்ம நபர் தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2000 மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.