வயலில் யூரியா கலந்த தண்ணீரை குடித்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நன்னாவரம் பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் இருக்கும் கரும்புக்கு சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சி இருக்கிறார். இந்நிலையில் தண்ணீருடன் யூரியா உரத்தையும் கலந்து கரும்புக்கு பாய்ச்சியதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதை அறியாமல் கூலி வேலை செய்து கொண்டிருந்த 20-க்கும் அதிகமான தொழிலாளர்கள் சொட்டுநீர் பாசன குழாயில் இருந்து வந்த தண்ணீரை குடித்துள்ளனர்.
இதனையடுத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இதைப் பார்த்து தண்ணீரில் யூரியா கலந்திருந்ததை தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் யூரியா கலந்த தண்ணீரை குடித்த அண்ணாவரம் கிராமத்தில் வசிக்கும் ரம்யா, சுகுணா, லட்சுமி, இந்திரா, சின்னபொண்ணு, சுந்தரி உள்பட 17 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.