தொழிலாளியை மது பாட்டிலால் குத்தியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓடக்கரை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். மேலும் தொழிலாளியான இவர் தைக்காபுரத்தில் பதநீர் காய்ச்சும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் பதநீர் காய்ச்சும் வேலையை முடித்துவிட்டு சக தொழிலாளியான ஹரிராம் கிருஷ்ணனுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் செந்தில்வேல் என்பவர் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.
இதனை கண்ணன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த செந்தில்வேல் தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து கண்ணனின் முகம், கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கண்ணனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் செந்தில்வேல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள செந்தில்வேலை வலைவீசி தேடி வருகின்றனர்.