தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கீழக்கடையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் முருகன் அவருடைய நண்பரான கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவருடன் சேர்ந்து புதுவயல் பகுதிக்கு சென்று அங்கு இருவரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜரத்தினம், சக்திவேல் முருகனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேல் முருகனின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜரத்தினத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சத்திவேல் முருகன் மனைவியை ராஜரத்தினம் அவதூறாக பேசியுள்ளார். இதனால் சக்திவேல் முருகன் ராஜரத்தினத்தை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜரத்தினம் சக்திவேல் முருகனை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.