தொழிலாளியை கொலை செய்த நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்(20). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி அஜீத் தனது நண்பர்களான ஜெகதீசன், ராஜேஷ் , பிரபு மற்றும் சவுந்தரராஜன்ஆகியோருடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதை அஜித்தின் மனைவி குணசுந்தரி தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு அஜித்தின் நண்பர்கள் நால்வரும் சேர்ந்து குணசுந்தரியுடன் தகராறில் ஈடுபட்டனர் . இதன் காரணமாக அஜித் தனது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த அஜித்தின் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து அஜித்தை கைகள் மற்றும் கால்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அஜித் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஜித்தின் மனைவி குணசுந்தரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசன்,சவுந்தரராஜன்,ராஜேஷ்மற்றும் பிரபுவை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நான்கு பேருக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை மனுதாரரான அஜித்தின் மனைவி குணசுந்தரிக்கு இழப்பீடு தொகையாக வழங்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கோவை சிறைக்கு அழைத்து செல்ல காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.