தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனவன்குளம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பணம் நகை உள்ளதா என சோதனை செய்துள்ளனர்.
இதனையடுத்து நகை அவரிடம் இல்லாததால் அவரிடம் இருந்த ரூ.2,500 பணத்தை மட்டும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வராஜ் நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகையை பறித்துச் சென்ற நம்பிநகர் பகுதியில் வசிக்கும் பூல் பாண்டி, செல்வம் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட மற்ற ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.