விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தன் காடை பகுதியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தவசிலிங்கம் வீட்டில் இருந்து வெளியேறி நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் தவசிலிங்கம் பூசாரியாக வேலை பார்க்கும் கோவிலின் அருகில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி செல்லம்மாள் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தவசிலிங்கம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.