மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கு தமிழ் மொழியைப் புறக்கணித்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி முறையிடப்பட்டதை தொடர்ந்து அவசர வழக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் திரு அழகுமணி என்பவர் நேற்று முறையிட்டார். மத்திய அரசின் தொல்லியல் துறையின் தொல்லியல் நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேடர் நொய்டாவில் இயங்கி வருவதாகவும், இந்நிறுவனம் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய வரலாறு தொல்லியல் துறை மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம் பாலி மற்றும் அரபு மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் தொல்லியல் துறையின் முதுகலை பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் திரு அழகுமணி முறையிட்டார்.
மேலும் தமிழ் மொழியையும் அந்த அறிவிப்பில் இடம் பெற செய்ய வேண்டும் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கிருபாகரன் திரு புகழேந்தி ஆகியோர் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறினர்.