சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பாளி ஆவரங்காட்டு தோட்டத்தில் விவசாயி பழனியப்பன் வசித்து வந்தார். இவர் தன்னுடைய வீட்டின் முன் சிமெண்ட் அட்டையால் வேயப்பட்ட மாட்டுத்தொழுவம் அமைத்து அதில் 10 ஆடுகள், 2 எருமை மாடு மற்றும் ஒரு கன்று குட்டி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்த மாட்டுத் தொழுவத்தின் ஒருபுறத்தில் 12 உயரத்திற்கு செங்கற்களை கொண்டு மண்ணாலான பழமையான சுவர் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக கவுந்தப்பாடி பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக இந்த பழமையான சுவர் நனைந்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பழனியப்பன் தொழுவத்தினை சுத்தம் செய்தபோது பழமையான சுவரானது இடிந்து விழுந்துள்ளது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கிய பழனியப்பன் படுகாயமடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று பழனியப்பனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் 3 ஆடுகளும் பரிதாபமாக இறந்து விட்டது. அதுமட்டுமின்றி ஒரு எருமை கன்று குட்டி மற்றும் 2 ஆடுகள் பலத்த காயமடைந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியப்பனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.