காணி இன மக்கள் கட்டிய தொங்கு பாலத்தை உதவி கலெக்டர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு பகுதியில் வாழும் காணி இன மலைவாழ் மக்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் குறுக்கே மரத்தாலான தொங்கு பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் விக்ரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் அவர்களுக்கு ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கயிறு வழங்கப்பட்டது. அதனை கொண்டு அங்கு வாழும் காணி இன மக்கள் அவர்களாகவே மரக்கட்டை, மரக்கம்புகள் ஆகியவற்றை அடுக்கி தொங்கு பாலம் ஒன்று ஆற்றின் குறுக்கே அமைத்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் 15 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலத்தை சேரன்மகாதேவி உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். மேலும் உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் காணி பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் பெறுவதற்கான மனுக்களையும், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான மனுக்களையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் வெற்றிச்செல்வி, மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.