தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுக் கழிப்பிடம், வீட்டில் கழிவறை இல்லாத சூழல் காணப்படுகிறது.
இதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் எல்லாம் எங்கே போனது என கேள்வியை முன்வைக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் இன்றளவு முறையாக செயல்படுத்தப் படவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்து. தூய்மை இந்தியா திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமே அனைவருக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்துவதோடு, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
நாடு முழுவதும் இதுவரை பத்துக்கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று அரசு தரப்பில் சொல்லப்படும் நிலையில் இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக பிரதமர் எப்போது அறிவிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய நிதி நிலை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூய்மை இந்தியா திட்டத்திற்காக 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேபோன்று கடந்த 6 ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டத்திற்கு பல ஆயிரம் கோடிகள் செலவு செய்யப்பட்டதாக அரசு ஆவணங்களும் கூறும்போது ஏன் 10 கோடி கழிப்பறைகள் மட்டும் காட்டப்பட்டன என கேள்வி எழும்புகிறது. அப்படி என்றால் அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேராதது ஏன்? இதனைச் சாத்தியப்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்விகள் எல்லாம் நம் முன்னே வந்து செல்கிறன.