ரசிகர்களுடன் யூடியூபில் உரையாடிய ஜிவி பிரகாஷ், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தூங்காமல் வேலை செய்தும் பாராட்டு கிடைக்கவில்லை என்று கூறினார்.
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரை நட்சத்திரங்களும் வீட்டில் இருந்தபடியே தங்களது ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலமாக உரையாடி வருகின்றனர்.
இந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் யூடியூபில் அவரது ரசிகர்களுடன் உரையாடியது மட்டுமல்லாமல், அவர்கள் ஆசைப்பட்டு கேட்ட பாடல்களையும் அருமையாக பாடி அசத்தியுள்ளார். அதற்கிடையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கேள்விகள் இவரிடம் எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் “இந்த ஸ்டுடியோவில் தான் நானும், இயக்குனர் செல்வராகவன் அவர்களும் எத்தனையோ நாட்கள் தூங்காமல் வேலை செய்திருக்கிறோம். அப்படம் வெளியாகிய பொழுது பாராட்டுகளும், விருதும் கிடைக்கவில்லை என்றபோதிலும், இப்பொழுது அதை ஞாபகம் வைத்துக் கொண்டு கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அப்பொழுது இம்மாதிரியான பாராட்டுக்கள் கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். உடனே ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் உருவாக்கி இருப்போம். அச்சமயத்தில் இப்படத்தின் முதல் பாதி நீளம் உள்ள வெர்ஷன் ஒன்று இருந்தது. 2-ம் பாதியும் நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. கிட்டதட்ட இரண்டும் சேர்ந்து 4 மணி நேர படமாக இருந்தது.
அப்பொழுது அதில் முதல் பாதி, முதல் பாகமாகவும், 2-ம் பாதி 2-ம் பாகமாகவும் வெளியிடுவோம் என்று இயக்குனர் செல்வராகவன் என்னிடம் கூறினார். இறுதி முடிவில் ஒரு பாகமாகவே வெளியிட திட்டமிட்டு வெளியானது இப்படம். அப்பொழுது இருந்த நிலையில் 2 பாகங்களாக இப்படம் வெளியிட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு செய்திருந்தால் இதை தொடர்ந்து 3 மற்றும் 4-ம் பாகங்கள் உருவாகி இருக்க கூடும். அது ஒரு சீரியஸான படமாக இருந்திருக்கும். செல்வராகவனுடன் பணியாற்றியது ஒரு அழகான அனுபவம். அந்தப் படத்தில் நான் ஒரு அங்கமாக இருந்ததில் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.