தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் கட்டுபாட்டை இழந்து லாரிகள் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒரு லாரி வெங்காயம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சீர்காழி பகுதியில் வசிக்கும் ராஜதுரை என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் லாரி தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது முன்னால் சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் மீது மோதியது. இதனால் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனையடுத்து சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த லாரியை தேனி பகுதியில் வசிக்கும் செல்லபாண்டியன் மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகிய இருவரும் ஓட்டிவந்தனர்.
இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தொப்பூர் காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த 2 டிரைவர்களையும் உடனடியாக மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடியினர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்தை அப்புறப்படுத்தி சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.