திருமணம் செய்து கொள்வதற்காக தனது வீட்டாருடன் சென்னையிலிருந்து கோவில்பட்டி வந்த மணமகன் உட்பட 6 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு அமுலில் இருப்பதால் திருமணத்தை ஊரடங்கிற்கு பின் செய்து கொள்ளலாம் என்று இருவரது வீட்டாரும் முடிவு செய்திருந்த நிலையில்,
ஊரடங்கு நாளுக்கு நாள் தள்ளிக்கொண்டே போக, பொறுமையை இழந்த மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்து மணமகனை காரில் வர சொன்னார்கள். அதன்படி அவரது குடும்பத்தினருடன் காரில் கோவில்பட்டிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் கோவில்பட்டியின் எல்லைப்பகுதியில் காவல்துறையினரிடம் அவர்கள் சிக்கி கொள்ள அவர்களிடம் விசாரணை மேற்கொள்கையில், அவர்களிடம் முறையான இ பாஸ் இல்லை என்பது தெரிய வரவே,
அவர்கள் ஊருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகளிடம் நாங்கள் திரும்பி சென்னைக்கு சென்று விடுகிறோம் என்று கூறி காரை திருப்பி சென்றவர்கள், கூறியபடி சென்னை செல்லாமல் மாற்றுப் பாதை வழியாக ஆவல்நத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். பின் அங்கேயே வைத்து திருமணத்தை மறைமுகமாக முயற்சிக்க,
காவல்துறையினருக்கு கிராம மக்கள் மூலமாக ரகசிய தகவல் சென்றது. இதையடுத்து அங்கு விரைந்த அவர்கள் திருமணத்தை தடுத்து நிறுத்தி மணமகன் உட்பட அவரது வீட்டார் 6 பேரையும் தனியார் கல்லூரி ஒன்றில் தனிமைப்படுத்தி அவர்களிடமிருந்து சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.