கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையினால் தூத்துக்குடி மாநகரம் தண்ணீரினால் சூழ்ந்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தூத்துக்குடி மாவட்டமே நீரில் மூழ்கி உள்ளது. இரவு பகலாக இடைவிடாமல் கனமழை கொட்டியதால், தூத்துக்குடியில் பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. நேற்று காலை முதல் லேசான வெயில் அடித்தது, மாலையில் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஏற்கனவே திருச்செந்தூர் தூத்துக்குடி சாலையில் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால், போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் பிரையண்ட் நகர் வழியாக சுற்றியே செல்கிறது. அநேக இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தூத்துக்குடியில் பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு மேடான பகுதியில் உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். பல ஆயிரக்கணக்கான வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். ஆட்சியர் அலுவலகம் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகரமே தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.