தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 6 நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. குளங்கள் ஓடைகள் நிரம்பிய நிலையில் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்த மழை வெள்ளம் காரணமாக பயிர் சேதம் அதிகமாக உள்ளது. சுமார் 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடியில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நடுவை முடிந்து பயிர்கள் வளரும் பருவத்தில் உள்ளன.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக வயலில் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதேபோல உளுந்து பாசிப்பயிறு ஆகியவை 78 ஆயிரத்து 500 எக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 69 ஆயிரம் எக்டேர் பரப்பளவிலும், மக்காச்சோளம் 47 ஆயிரம் எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 5 ஆயிரத்து 300 எக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது. இதில் பயிர் வகைகள், மக்காச்சோளம் உள்ளிட்டவை அறுவடைக்கு தயாராக இருக்கின்றது. வயல் நிலங்கள் அனைத்திலும் தண்ணீர் சூழ்ந்துள்ள இந்நிலை இன்னும் சில நாட்கள் தொடர்ந்தால், பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.