தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இந்நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கம் படுகின்றது. இது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் 21.10.22 அன்று மதியம் 12.05 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூர் சிறப்பு கட்டண ரயில் 22.10.22 அன்று மாலை 3 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8:30 மணிக்கு மைசூர் சென்று சேரும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயில்கள் யேலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டி, மூன்று குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.