பிறந்து சில மணி நேரங்களே ஆன, முட்புதரில் வீசி சென்ற குழந்தையை மீட்ட இளம் பெண் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொத்த தெரு காளியம்மன் கோவில் உட்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் இன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. குழந்தையின் அழுகுரலை கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கிடந்தது. பின்னர் குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
காவல்துறை வருவதற்கு முன்பு அந்த குழந்தையை மீட்ட ரம்யா என்ற இளம் பெண் தாய்ப்பால் கொடுத்து அந்த குழந்தையை சமாதானப் படுத்தினார். தனது வீட்டிற்கு குழந்தையை எடுத்துச் சென்று சுடுநீரில் குளிப்பாட்டி ஆடை அணிவித்தார். இந்த செயலை கண்ட அக்கம் பக்கத்தினர் ஆனந்த கண்ணீரில் திளைத்தனர். மேலும் குழந்தையை காண அப்பகுதி மக்கள் ரம்யா வீட்டில் குவிந்துள்ளனர்.
ரம்யாவிற்கு திருமணமாகி தற்போது இரண்டு மாத கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தை நல அமைப்பிற்கு தகவல் அளித்து, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.