நிலத்தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டலாம்பட்டி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சின்ன கிருஷ்ணன் என்ற தம்பி இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சின்ன கிருஷ்ணனின் கரும்பு தோட்டத்தை சின்னசாமி வளர்த்து வந்த நாய் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சின்ன கிருஷ்ணன், அண்ணன் மனைவியான கண்ணம்மாவை திட்டியுள்ளார். இதனை சின்னசாமியின் மகனான முனியப்பன் தட்டி கேட்டுள்ளார். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த சின்ன கிருஷ்ணன் அரிவாளால் கண்ணம்மாவை வெட்டினார். இதில் கண்ணம்மாவுக்கு கை எலும்பு முறிந்து விட்டது. மேலும் இந்த மோதலின்போது சின்ன கிருஷ்ணனின் மகன் விக்னேசுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சின்ன கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் கண்ணம்மா, முனியப்பன், விக்னேஷ் போன்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.