மருத்துவமனை கழிவறை தொட்டியில் மூழ்கடித்து குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர அவசர சிகிச்சை பிரிவு இருக்கிறது. இங்குள்ள கழிவறையை சுத்தம் செய்வதற்காக கடந்த 4-ஆம் தேதி பணியாளர்கள் சென்றனர். அப்போது தண்ணீர் வரும் தொட்டியை திறந்து பார்த்தபோது அங்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை, தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குழந்தை இறந்து கிடந்த கழிவறைக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் சென்று வந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கர்ப்பிணி பெண் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்று தெரியவந்தது. இதற்கிடையில் மருத்துவமனையில் மற்ற வார்டுகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கடந்த 2-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பூதலூர் தாலுக்கா ஆல்க்குடியை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. மேலும் கடந்த 4-ஆம் தேதியன்று அந்த பெண் அங்கிருந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மருத்துவமனையில் இருந்து சென்றுவிட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
அதன்பின் காவல்துறையினர் அந்த பெண்ணை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டதில் “அவர் பன்னீர்செல்வம் என்பவரின் மகள் பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது. இவர் திருமணம் ஆகாத நிலையில் திருப்பூரில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருடன் வேலை பார்த்த சிதம்பரத்தை சேர்ந்த வாலிபருடன், பிரியதர்ஷினிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்யும்மாறு பிரியதர்ஷினி அந்த வாலிபரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு வாலிபர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரியதர்ஷினி தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு தான் கர்ப்பிணியாக இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இதற்கிடையில் தனக்கு பிரசவ வலி நெருங்குவதை அறிந்து பிரியதர்ஷினி வயிற்று வலி என்று கூறி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.
அங்கு பிரியதர்ஷினிக்கு கடந்த 3-ம் தேதியன்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. இது ஊருக்கு தெரிந்தால் அவமானம் என்று கருதிய பிரியதர்ஷினி தனக்கு பிறந்த குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதற்காக பிரியதர்ஷினி அந்த குழந்தையை மருத்துவமனையில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு ஒன்றும் நடக்காததுபோல் தனது வார்டுக்கு வந்துவிட்டார். அதன்பின் பிரியதர்ஷினி யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி விட்டார்” என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த பெண் கடுமையான மன உளைச்சலில் இருப்பதால் அவருக்கு குழந்தைகள் நலக்குழுவினர் உதவியுடன் மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.