தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனி பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பேரன் புகழ் 4-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 19-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் புகழ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனைடுத்து அவரது பாட்டி மற்றும் குடும்பத்தினர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அதன்பின் தனது பேரன் காணாமல் போனது குறித்து வெள்ளையம்மாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அதே பகுதியை துரைசாமி என்பவரின் வீட்டின் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்போது துரைசாமி அந்த தொட்டியை பார்த்தபோது அதில் சிறுவன் புகழின் உடல் சிதைந்து சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் புகழின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “சம்பவத்தன்று வீட்டின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தவறி தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து இருக்கலாம். மேலும் அந்த தொட்டி பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அதில் தேங்கி நின்ற தண்ணீரில் சிறுவன் தவறி விழுந்து இறந்ததால் உடல் துர்நாற்றம் வீச தொடங்கியது” என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.