கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களில் 65 வயதுக்குட்பட்ட நபர்களில் 10 சதவீதம் பேருக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் மத்திய நகரமான உகான் என்ற பகுதியில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலாக தோன்றியது. அப்பகுதியில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள 100 நபர்களை உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்கான் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வருகின்றனர். அந்த நோயாளிகளின் வயது சராசரியாக 59. கடந்த ஜூலை மாதம் முடிந்த முதல் கட்ட முடிவில் அந்த நூறு நபர்களில் 90 நபர்களுக்கு நுரையீரல் சேதம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. அவர்களின் நுரையீரல் காற்றோட்டம், வாயுப் பரிமாற்றம் செயல்பாடுகள் அனைத்தும் உடல் ஆரோக்கியமான மனிதர்களின் நிலைக்கு திரும்பவில்லை.
இந்த ஆய்வை மருத்துவர் பெங் ஜியோங் தலைமையிலான குழுவினர்கள் நடத்தியிருக்கின்றனர். கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்தவர்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்குப் பின்னரும் ஆக்சிஜன் எந்திரங்களை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று பீஜிங் பல்கலைக்கழகத்தின் டோங்ஸிமென் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் லியாங் டெங்ஸியாவ் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட 65 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேரின் உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தி முழுவதுமாக மறைந்து விடுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.